திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தல வரலாறு கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அஷ்ட லிங்கங்கள்: இந்திரலிங்கம். அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம்,. வாயுலிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தல வரலாறு கிரிவலப் பாதையில்
அமைந்துள்ள அஷ்ட லிங்கங்கள்:
இந்திரலிங்கம். அக்னி
லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம்,. வாயுலிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம்.
மனித வாழ்க்கை என்பது சாதாரண விலங்குகளைப்
போல உண்டு, உறங்கி, குடும்ப வாழ்வில் ஈடுபட்டு தங்களை தற்காத்து பின்னர் மடிந்து போவது அல்ல.
மனித வாழ்வின் உண்மையான பக்குவத்திற்கு கோயில்கள் மிகவும் அவசியமானவை. இறை வழிபாடு
இல்லாவிடில் நமது அன்றாடத் தேவைகளை நாம் வாழும் பூமி நமக்கு வழங்காது. ஆக
அந்தளவுக்கு மனித வாழ்வு கோயில்களை சார்ந்திருக்கிறது. ‘கோயில் இல்லாத ஊரில்
குடியிருக்க வேண்டாம்’ என்ற ஒரு சொல் உண்டு. இதன் மூலமே கோயிலின் அவசியத்தை உணர
முடியும். நமது பாரத தேசத்தில் பல கோயில்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக தமிழகத்தில்
அமைந்துள்ள கோயில்களின் எண்ணிக்கையைச் சொல்லவே வேண்டாம். அப்படி அமையபெற்ற
கோயில்களில் சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்ற பெருமையை பெற்றது தான்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்.
காசியில்
இறந்தால் முக்தி, திருவாரூரில்
பிறந்தால் முக்தி, சிதம்பரத்தை
தரிசித்தால் முக்தி கிடைக்கும். ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை.
பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகவும் குறிப்பிடப்படுகிறது. தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 233வது தேவாரத்தலமாகும். அம்மனின் 51 சக்திப் பீடங்களில் இது அருணை
சக்தி பீடம் ஆகும். முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு இருப்பது அனைவருக்கும்
தெரிந்த விஷயம். இதே போல் விநாயகருக்கும் அறுபடை வீடு இருக்கிறது. இத்தலத்தில்
கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின்
முதல் படை வீடாகும். இத்தல இறைவன் அருணாச்சலேஸ்வரராகவும், அம்பிகை உண்ணாமுலையம்மையாகவும்
வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
கோயில் அமைப்பு:
திருவண்ணாமலை
அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. கோயிலில் ஒன்பது கோபுரங்கள்
உள்ளன. ஆறு பிரகாரங்கள், 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (ரமணம்
தவம் செய்த இடம்), 43 செப்புச்
சிலைகள், திருமண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என
அமைந்த கோயில் இது. சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் கோயிலின் உள்ளேயே அமைந்துள்ளது
சிறப்பு.
தல வரலாறு:
படைக்கும்
கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும்
கடவுளான விஷ்ணுவுக்கும் தங்களில் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. இதை
அறிந்த சிவபெருமான் அவர்கள் முன் ஜோதி வடிவில் தோன்றினார். இருவரும் சிவனிடம்
முறையிட்டனர். அப்போது சிவன் யார் தனது அடிமுடியை கண்டு வருகிறீர்களோ அவரே
உயர்ந்தவர் எனக் கூறினார். விஷ்ணு வராக (பன்றி) அவதாரமெடுத்து பூமிக்குள்
சென்றார். அது போய்க் கொண்டே இருந்தது. திரும்பி வந்து சிவனிடம் தன்னால் கண்டறிய
முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டார். பிரம்மா அன்னப்பறவையாக உருவெடுத்து
சிவபெருமானின் முடியை கண்டு வர கிளம்பினார். அவரால் காண முடியவில்லை என்றார்.
சிவபெருமானே முழு முதற் கடவுள் என்பதை உணர்ந்து கொண்டு அவரை வணங்கி நின்றனர்.
சிவபெருமானும் சோதி வடிவிலிருந்து ஒரு மலையாக மாறி காட்சி கொடுத்தார். அந்த மலை
தான் கோயிலின் பின்புறம் அமைந்துள்ள அண்ணாமலை. பின்பு தன்னை வழிபாடு செய்வதற்கு
ஏதுவாக லிங்கோத்பவராக காட்சி கொடுத்து அருளினார்.
இறைவன்
இத்தலத்தில் சுயம்புலிங்கத் திருமேனியாக நாகக் கிரீடம் அணிந்து தூய வெண்ணிற
ஆடையுடன் அருணாசலேஸ்வரர் என்ற திருநாமத்துடன் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு
அருள்புரிகிறார். கருவரை கோஷ்டத்தில் ஈசனின் பின்புறம் லிங்கோத்பவர்
எழுந்தருளியிருக்கிறார். இறைவன் சந்நிதியை அடுத்து உண்ணாமுலை அம்மை தனிக் கோவிலில் கருவறையில் காட்சி தருகிறாள்.
பிரம்மா பெற்ற சாபம்:
பிரம்மா
தன்னால் அடிமுடியை காணவில்லை என்பதை மறைத்து சிவபெருமானின் தலையில் இருக்கும் தாழம்பூவை பொய் சாட்சி சொல்ல வைத்து தான் கண்டுவிட்டதாக பொய்யுரைத்தார். இதையறிந்த சிவன் கோபமுற்று இனி உனக்கு பூமியில் கோயிலோ, பூஜையோ கிடையாது என சாபமிட்டார்.
அதே போல் தாழம்பூவையும் இனி தனது பூஜையில் உன்னை பயன்படுத்தமாட்டார்கள் என்று
கூறிவிட்டார். அதன் காரணமாகத்தான் இன்றளவும் சிவாலயங்களில் தாழம்பூவை மட்டும்
படைக்க மாட்டார்கள்.
நடைபெறும் திருவிழாக்கள்:
பிரம்மோற்சவம், ஆனி மாத பிரம்மோற்சவம், மாசி மகம் தீர்த்தவாரி, கார்த்திகை தீபம், பரணி தீபம், மகா தீபம், பங்குனி உத்திரம் திருக்கல்யாண
உற்சவம், ஆகிய திருவிழாக்கள் ஆண்டு தோறும்
நடைபெறுகிறது. வருடத்தின் எல்லா மாதங்களிலும் ஏதாவது ஒரு திருவிழா இத்தலத்தில் நடந்து கொண்டே இருப்பது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெறுகிறது. தினமும் 6 கால பூஜை நடைபெறுகிறது.
சிறப்பு வழிபாடு:
சிவன்
கோயில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமையாக இருக்கும். சோமவாரம், சோமப் பிரதிஷணம் போன்றவற்றின்
மூலம் நாம் இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம். ஆனால், திரு அண்ணாமலை அக்னி மலை.
அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை. அக்னிக்குரிய கிரகம் அங்காரன். ஆகவே இந்தக்
கோயிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய்கிழமை அன்று தான் விசேஷ வழிபாடு
நடக்கின்றது. செவ்வாய் கிழமை அன்று வழிபடுவோர் பிறவிப் பிணியிலிருந்து விடுபடலாம்
என்று புராணங்கள் கூறுகின்றன.
கோபுரங்களும் அதன் உயரமும்:
· கிளி கோபுரம் - 81 அடி உயரம்
· தெற்கே திருமஞ்சன கோபுரம் - 157 அடி உயரம்
· தெற்கு கட்டை கோபுரம் - 70 அடி உயரம்
· மேற்கே பேய் கோபுரம் - 160 அடி உயரம்
· மேற்கு கட்டை கோபுரம் - 70 அடி உயரம்
· வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் - 171 அடி உயரம்
· வடக்கு கட்டை கோபுரம் - 45 அடி உயரம்.
அண்ணாமலையின் சிறப்புகள்:
அண்ணாமலை
கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது. இம்மலையானது 2688 அடி (800 மீட்டர்) உயரம் கொண்டது. கிரிவலப்
பாதையின் தூரம் 14 கிலோ
மீட்டர். இந்த பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங்களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.
அடிக்கு 1008 லிங்கம் அமைந்திருக்கிறது என்பர்.
இந்த மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம் என்பது
சிறப்பு.
உமைக்கு இடபாகம் கொடுத்த சிவன்:
கைலாயத்தில்
ஆழ்நிலை தியானத்தில் இருந்த ஈசனின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால்
இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்குள்ளாகின. இதனால்
ஏற்பட்ட பாவத்தைப் போக்க பூவுலகம் வந்து காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை
காமாட்சியாக தவம் புரிந்தாள். ஒரு நாள் கம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அன்னை காமாட்சி தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து
அணைத்துக் கொண்டார். இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார்.
அப்போது
அன்னை காமாட்சி “அய்யனே நீங்கள் என்னை எப்போதும் பிரியாதிருக்க தங்கள்
திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும்” வேண்டினார். அதற்கு சிவபெருமான்
அண்ணாமலை சென்று தவம் செய் என்றார். அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை
மாதத்தில் பௌர்ணமியும், கிருத்திகையும்
சேரும் நாளில் மலையின் மீது பிரகாசமான ஒளி ஒன்று தோன்றியது. அப்போது மலையை
இடதுபுறமாக சுற்றி என்ற அசரீரி ஒலித்தது. அவ்வாறே கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து
தனது திருமேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்டார் சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக
காட்சியளித்தார். இதை நினைவுகூறும் விதமாக அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
கிரிவலம் மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்:
· ஞாயிற்றுக்கிழமை - சிவலோக பதவி
கிட்டும்.
· திங்கள்கிழமை - இந்திர பதவி கிடைக்கும்.
· செவ்வாய்க்கிழமை - கடன், வறுமை நீங்கும்.
· புதன்கிழமை - கலைகளில்
தேர்ச்சியும், முக்தியும்
கிடைக்கும்.
· வியாழக்கிழமை - ஞானம் கிடைக்கும்.
· வெள்ளிக்கிழமை - வைகுண்டப் பதவி
கிடைக்கும்.
· சனிக்கிழமை - பிறவிப் பிணி
அகலும்.
"This Content Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Website Link: https://genreviews.online/
Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"
Comments
Post a Comment